jump to navigation

கடைசியில் நிற்கிறேன் ஜூன் 19, 2006

Posted by padhu in அனுபவம் / நிகழ்வுகள்.
2 comments

குறை தீர்ந்த பக்தர்கள் உன்முன்னே அலைக் கூட்டம்
குறை தீர வந்தவர் சிலர் பின்னே நான் மட்டும்
மறைவாய்க் கடைசியில் நிற்கிறென்.

மனம் மகிழ ஒரு சோதனையா – எனக்கு
தினம் நெகிழ ஒரு சாதனையா

இறக்கி வைக்க வேண்டாத இன்பச்சுமையா – இவன்
இறக்கை வாய்க்க வேண்டாத தேவப்பதுமையா

வேகங் கெடுத்தாண்ட நற்பிறவியா – என் மகன்
மேகந் துளைத்துவந்த துறவியா

ஆற்றல் அருள வேண்டி நிற்பதா – இல்லை
ஏற்றம் தரும் அன்பு போற்றி உரைப்பதா

ஒடுங்கி நின்ற குசேலன் போல – புரியாமல்
ஒதுங்கி நான் கடைசியில் நிற்கிறேன்

பி.கு:
என் மகனுக்கு டௌன்-ஸின்ட்ரோம் என்ற மரபணுவியல் கோளாறு இருக்கிறது. அது அவனுடைய மன வளர்ச்சியையும் உடல் வளர்ச்சியையும் பாதிக்கிறது. ஆனாலும் அவன் காட்டும் அன்பினால் அவையெல்லாம் ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. இருந்தாலும் இந்த நல்ல நெஞ்சங்கள் புத்திக்கூர்மையும் கொண்டிருப்பதுதான் நியாயம் என்று அடியேனுக்குப் படுகிறது. அவனுக்கு மொட்டையடிக்க இந்த வாரம் ஊருக்குப் போகிறேன். கடவுளிடம் என்னக் கேட்பது என்ற குழப்பத்தில் எழுதப்பட்டது இது.

Advertisements

ஆளில்லாத ஆட்டம் ஜூன் 19, 2006

Posted by padhu in அனுபவம் / நிகழ்வுகள்.
add a comment

கூடைப்பந்து விளையாட்டு அரங்கம் விளக்கொளியில் மின்னியது. எல்லா இருக்கைகளும் நிரைந்திருந்தன. அனைவரும் கூச்சல் போட்டுக்கொண்டிருந்தார்கள். நானும் அமெரிக்க நண்பனும் மேல் வரிசையில் உட்கார்ந்திருக்கிறோம். கொஞ்சம் அசௌகரியமான இடம்தான். ஆனால் இந்த இடம் கிடைத்ததே பெரிய விசயம்.

நண்பன்தான் வா ஆட்டம் பார்க்க போகலாம் என்று கூப்பிட்டுக்கொண்டு வந்தான். நான் தனி ஆள், ஊருக்குப் புதிது. எனவே, உற்சாகமாக கிளம்பினேன். வாரக்கடைசி ஆனதால் நல்லக் கூட்டம். சிற்றுந்தை நிறுத்த இடமில்லை. அரங்கத்தைவிட்டு வெகு தொலைவில் நிறுத்திவிட்டு நடந்து வந்தோம். இந்தக்கூட்டத்தில் எப்படி அனுமதிச் சீட்டு கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டே அரங்கை நோக்கி நடந்தேன். நண்பன் ஒரு நபரை அணுகி பேசினான். சிறிது பணம் கைமாறியதை தூரத்திலிருந்து பார்த்தேன். பின் அனுமதிச் சீட்டுடன் வெற்றிப் புன்னகையோடு வந்தான். சரிதான் இங்கேயும் கருப்பு சந்தைதான் போல.

உள்ளே நுளைபவர்களுக்கு சட்டையில் ஒட்டிக்கொள்ள ஒர்லான்டோ மாஜிக் அணியின் சின்னம் பொறித்த படங்களைக் கொடுத்தார்கள். ஷக்கில் ஓநீலை தொலைக்காட்சியில்தான் பார்த்திருக்கிறேன். இன்றைக்கு நேரில் பார்க்கப்போகிறேன்.

அரங்கத்தின் மத்தியில் நான்குபுறமும் வைத்திருந்த மிகப் பிரம்மாண்டமான திரைகள். அதில் கீழ் வரிசையில் உட்கார்ந்திருக்கும் முக்கியப் புள்ளிகளைக் காட்டிக்காட்டினார்கள். ஜனாதிபதி கிளிண்டன் திரையில் கையசைத்தபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. எந்த இடத்தில் உட்கார்ந்திருக்கிறார் என்று இங்கிருந்து தெரியவில்லை.

முதலில் கரகாட்டக்காரர்கள் போல் உடுத்தியிருந்த ஆண்களும் பெண்களும் வந்தார்கள். பின்னாலேயெ விளையாட்டுச் சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள் வந்தார்கள். ஒவ்வொருவராக கூடையில் பந்தை சரியாக எறிந்தார்கள். கரகாட்டக்காரர்கள் வாத்திய தாளத்துடன் சாகச வித்தைகள் செய்தனர். பின்னணியில் “வீ வில் .. வீ வில் ராக் யூ!” என்ற பாட்டுடன் அரங்கிலிருந்தவர்களும் குரல் கொடுக்க அரங்கமே அதிர்ந்தது. ஆகாயத்தில் பிரகாசனமான ஒளிக்கதிர்கள் நடனமாடியது காண்ணாடிக்கூண்டு வழியே தெரிந்தது.

கொஞ்சம் அமைதியானார்கள். நான் மைதானத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் களித்து விளையாட்டு எப்போது ஆரம்பமாகும் என்று நண்பனிடம் கேட்டேன். அவன் அது ஆரம்பித்து பத்து நிமிடங்கள் ஆயிற்று என்றான். மைதானத்தில் யாருமே இல்லை. அப்படியானால் இங்கே திரையில் தொலைக்காட்சி மூலம் விளையாட்டைப் பார்க்கவா இத்தனை ஆர்ப்பாட்டம். விளையாட்டை நேரில் பார்ப்பவர்கள் என்ன செய்ய மாட்டார்கள்.

ஆனால் எனக்கு நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கவேயில்லை.

MGRக்கும் SPBக்கும் சண்டை ஜூன் 14, 2006

Posted by padhu in அனுபவம் / நிகழ்வுகள்.
1 comment so far

அந்தவருடம் தீபாவளிக்கு இதயக்கனி படம் பார்த்தேன். எப்போதாவது வருடத்திற்கு ஒரு முறை சின்ன மாமாக்களுடன் பார்ப்பதுதான். பள்ளிக்கூடத்தில் நண்பர்களிடம் கதைக் கேட்பதோடு சரி. மறுநாள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எம்ஜியார் உற்சாகமாக வந்தான். எங்களை விட இரண்டு வகுப்பு அதிகம் படிக்கிறவன். பெரும்பாலும் எம்ஜியார் படம் போட்ட உள்சட்டையும் கால் சிறாயும்தான் போட்டிருப்பான். அதனால் அவனை எங்களுக்கு எம்ஜியார் என்று கூப்பிட்டே பளக்கமாகிவிட்டது. அவன் மூன்று மாதம் முன்பே பக்கத்து ஊருக்குப் போய் இந்தப் படத்தைப் பார்த்து விட்டான். இங்கே திரும்பவும் பார்த்தான்.

“டேய் படம் எப்படிடா இருந்துச்சி”, என்று ஆவலோடு கேட்டான்.
“நல்லா இருந்துச்சிடா ஆனா அந்த இதழே இதழே பாட்டு எனக்குப் பிடிக்கலடா. அசிங்கமா இருந்திச்சிடா”, என்றேன்.
அவன் முகம் வாடிப் போய்விட்டது.
“ஆமாண்டா எம்ஜியாருக்கும் அந்தப் பாட்டு பிடிக்கலெடா. அதனால அவருக்கும் எஸ்பிபிக்கும் சண்டெடா”, என்று கவலையோடு சொன்னான்.
எனக்கு அது சரியாகத்தான் பட்டது. எஸ்பிபி மேல் கோபம் வந்தது.

படத்தில் துப்பாக்கிச் சண்டை, நகைச்சுவை என்று ஒவ்வொரு காட்சியாக மீண்டும் மனக்கண்ணில் ஓடவிட்டு ரசித்துப் பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது படத்திலிருந்த வேறு ஒருப் பாட்டைப் பற்றியும் பேச்சு வந்தது. (“இன்பமே உந்தன் பேர் …” என்று நினைக்கிறேன்)

“டேய் அந்தப்பாட்டும் நல்லாவே இல்லடா”, என்றேன்.
இதையெல்லாம் அவனும் முன்பே யோசித்திருப்பான் போல.
உடனே சொன்னான், “டேய் அது கனவுப் பாட்டுடா”.
என் சந்தேகங்களை எல்லாம் தீர்த்து வைத்த அவன் மேல் மேலும் மரியாதை ஏற்பட்டது. கனவுக் காட்சிகளுக்கு எம்ஜியார் எப்படி பொருப்பாகமுடியும். எனக்கு இப்போது அந்தப்படமும் எம்ஜியாரும் இன்னும் அதிகமாகப் பிடித்து போயினர்.